search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சியாளர் ராஜினாமா"

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோல்வி கண்டு வெளியேறியதை தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் ராஜினாமா செய்துள்ளார். #StephenConstantine
    ஷார்ஜா:

    17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பக்ரைன் அணி வீரர் ஜமால் ரஷித் வெற்றிக்கான கோலை அடித்தார்.

    முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வென்று இருந்தது. அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வி அடைந்தது. 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததும், இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளரான 56 வயது ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடைசி லீக் ஆட்டம் முடிந்ததுடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து நான் விலகி விட்டேன். நான் இந்திய அணியினருடன் கடந்த 4 வருடங்களாக இருந்து வருகிறேன். எனது நோக்கம் இந்திய அணியை ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற வைப்பது தான். அதனை நான் செய்து காட்டினேன். மேலும் சில சாதனைகளை நாங்கள் படைத்தோம். வீரர்கள் அனைவரும் எனக்கு அளித்த ஒத்துழைப்பை நினைத்து பெருமை அடைகிறேன். எனது சுழற்சி முடிந்து விட்டது. அணியில் இருந்து விடைபெறுவதற்கு இது சரியான தருணம் என்று நினைக்கிறேன். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது வருத்தம் அளிக்கிறது. இனிமேல் எனது குடும்பத்தினருடன் அதிகநேரத்தை செலவிட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2-வது முறையாக 2015-ம் ஆண்டில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஸ்டீவன் கான்ஸ்டன்டைனின் பதவி காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிய இருந்தது. கான்ஸ்டன்டைன் பயிற்சியில் இந்திய அணி தரவரிசையில் 96-வது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியை கான்ஸ்டன்டைன் ராஜினாமா செய்து இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிப்பதாகவும் அகில இந்திய கால்பந்து சங்க பொதுச்செயலாளர் குஷால் தாஸ் தெரிவித்துள்ளார். #StephenConstantine



    ×